பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது மரக்காணம் டாஸ்மாக் கடையை சன்னதி வீதியில் திறக்க கூடாது

மரக்காணம், நவ. 19:   மத்திய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று உயர்நீதி மன்றம் பல மாதங்களுக்கு முன் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இச்சாலைகள் ஓரம் இருந்த பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டது. ஆனால் மரக்காணம் சன்னதி வீதியில் உள்ள டாஸ்மாக் கடை மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ளது. இந்த கடையை மூடவேண்டும் என்று பல்வேறு கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், பல கட்டபோராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக இங்குள்ள டாஸ்மாக் கடை மட்டும் சாலை ஓரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்தது. இதன் காரணமாக தினமும் இங்கு குடிக்க வரும் குடிபிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சாலை ஓரம் வைத்துக்கொண்டு குடித்து வந்தனர். இவர்களுக்கு குடிபோதை அதிகமானதும் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். இதனால் இங்கு பல்வேறு பிர்ச்னைகள் ஏற்பட்டது.

 

இதனால் இந்த கடையை உடனடியாக மூடாவிட்டால் தொடர்போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் அறிவித்து இருந்தனர். இதன் காரணமாக நீதிமன்ற  உத்தரவின்படி கடந்த 20 நாட்களுக்கு முன் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் இங்குள்ள சன்னதி வீதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடிவிட்டனர். இதனால் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய டாஸ்மாக் ஊழியர்கள் பல இடங்களில் கடையை தேடினர். ஆனால் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொது மக்கள் யாரும் வாடகைக்கு இடம் கொடுக்கவில்லை. எனவே பழைய இடத்திலேயே மீண்டும் கடையை திறக்க டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்பாடு செய்து வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் சன்னதி வீதியில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இப்பகுதியில் உள்ள வணிகர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கோரிக்கை மனுவையும் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கொடுத்துள்ளனர். எனவே இங்கு மீண்டும் டாஸ்மாக் கடை அமைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories: