×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

காட்டுமன்னார்கோவில், நவ. 19: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் சார்பில் சமுதாய வள பயிற்றுநர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கும் கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். திட்ட பணியாளர்கள் சுகன்யா, மணிமேகலை மற்றும் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என 15க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, பெண் குழந்தை நலன் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் மேற்கண்ட அலுவலர்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்பதின் முக்கியத்துவம் மற்றும் தற்போது அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் தெளிவுபடுத்தியதுடன் குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் குமராட்சி கடைவீதி பகுதிகளில் பதாகைகளை ஏந்தியவாறு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக சென்றனர்.


Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது