விழுப்புரத்தோடு இணைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 11 கிராம மக்களை கைது செய்த போலீசார்

விழுப்புரம், நவ. 19:   விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 11 கிராம மக்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.கொளத்தூர், கொண்டசமுத்திரபாளையம், பூசாரிபாளையம், ஒட்டனந்தல், பெரிய செவலை, ஆமூர், துலங்கப்பட்டு, சரவணம்பாக்கம், கொத்தனூர், கோவுலாபுரம், குப்பம் உள்ளிட்ட கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவோடு இணைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 14ம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நலத்திட்டங்கள், சொந்த அலுவலக பயன்பாடு போன்ற பல்வேறு பணிகளுக்கு கள்ளக்குறிச்சிக்கு செல்ல வேண்டுமானால் இரண்டு மடங்கு செலவு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.

15ம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்த அவர்கள் கடந்த 16ம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்டோ, வேன் ஓட்டுநர்களும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவோடு இணைத்து, விழுப்புரம் மாவட்டத்தோடு இருக்க தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று 11 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் 7 ஆயிரம் மனு கொடுப்பதற்காக நேற்று புறவழிச்சாலையிலிருந்து கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  

போலீசார் கதவுகளை இழுத்துமூடி ஆட்சியர் அலுலகத்திற்குள் செல்லாதபடி தடுப்புகளை ஏற்படுத்தினர். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், மாவட்டம் பிரிப்பு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய கருத்துகேட்புகூட்டத்தின் போது, விழுப்புரம் மாவட்டத்திலேயே இருக்க வேண்டுமென 7 ஆயிரம் மனுக்களை அளித்தோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகமுதலமைச்சருக்கு 3,500 தபால்களை அனுப்பி வைத்தோம். 11 ஊராட்சிகளை 3 கிமீ தொலைவில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவோடு இணைத்தும், 19 கி.மீ தொலைவிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தோடு இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 310 பேர் கைது செய்யப்பட்ட அனைவரும் திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: