×

தேனி கலெக்டர் அலுவலகத்தில் குறைகளோடு குவிந்த கூட்டம்

தேனி, நவ. 19: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் 272 மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய துறையினர் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டார் வீட்டு மனைப்பட்டா
கோட்டூரை சேர்ந்த மக்கள் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனர். பின் கிராமத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேனியில் முத்துவீரன் கலெக்டராக இருந்தபோது, வீடுகள் இல்லாத 102 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினார். இதில் நாங்கள் குடிசைபோட்டுத் தங்கியிருந்தோம். பின்னர், அரசிடம்  குடிசையை மாற்றி வீடுகட்டித் தரகோரி வந்தோம். இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய பட்டா நிலத்தில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பட்டா கிடைத்தும் வீட்டடி மனையில்லாமல் தவித்து வருகிறோம். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி மாவட்ட நிர்வாகம் பட்டா பெற்றவர்களுக்கு வீட்டு மனையிடங்களை ஒதுக்கி கொடுப்பதோடு வீடு கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்தனர்.

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமங்களில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும்நிலை உள்ளது. எனவே,ஏற்கனவே, இந்த ஊராட்சியில் பணிபுரிந்தவரை நியமிக்க வேண்டும் என கிராமமக்கள் மனு கொடுத்தனர். கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த தேனி மாவட்ட நுகர்வோர் மற்றும் லஞ்சம், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு அமைப்பின் செயலாளர் முத்துவீரப்பன் தலைமையில் ஏராளமானோர் தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் வடக்கு வெளி வீதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடக்கிறது. இப்பகுதியில் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு பொதுக்கழிப்பிடம், வழிபாட்டுதலம் உள்ளது. எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது எனமனுவில்
தெரிவித்துள்ளனர்.

Tags : meeting ,office ,Theni Collector ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...