பணகுடியில் டெண்டர் விட்டு 4 மாதமாகியும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி முடக்கம்

பணகுடி, நவ. 19: பணகுடியில் டெண்டர் விட்டு 4 மாதங்களாகியும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி முடக்கத்திலேயே இருந்து வருகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பணகுடியில் இயங்கிவரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும்  500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நோயாளிகள் நலன்கருதி புதிதாக கூடுதல்  கட்டிடம் கட்ட ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இதற்கான டெண்டர் விட்டு கடந்த  4 மாதங்களாகியும் இன்னும் கட்டுமானப் பணிகள் துவங்கப்படாமல் முடக்கத்திலேயே உள்ளன. தற்போது  மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவில் உள்ளபோதும் அவர்களுக்கான ஓய்வறைகள் சரியான முறையில் இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.இதனிடையே ஆரம்ப சுகாதார வளாக முன்பகுதியில் ஓட்டுக்கூரையில் இயங்கிவந்த சித்த மருத்துவ சிகிச்சை  மைய கட்டிடமும் பழுதடைந்தது. அத்துடன் அதில் வேயப்பட்டிருந்த ஓடுகள் ஒவ்வொன்றாக விழும் நிலையில் அதை இடித்து  தள்ளிவிட்டு அதில் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில்,  வளாகத்தில் உள்ள மரங்களை அகற்றிவிட்டே கட்ட வேண்டும் என பொதுப்பணி துறை  அதிகாரிக்ள கூறிவருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதனிடையே இந்த சுகாதார மையத்தில் பெரும்பாலும் பிரசவம் அதிக அளவு நடைபெறும் நிலையில், இங்குள்ள  மரங்களின் நிழல்களே பச்சிளம் குழந்தைகளுக்கு இதமான சூழலை தரும்போது, மரங்களை அகற்றிவிட்டு  கட்டிடம் கட்ட முற்படும் போக்கிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர் தலையிட்டு பழைய ஓட்டுக்கூரை கட்டிடத்தை இடித்து அதில் புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.  மேலும் தளவாய்புரத்தில் ரூ.25 லட்சம்  மதிப்பீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில்  கட்டப்பட்டு வந்து துணை சுகாதார நிலையமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற நோயாளிகள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைகின்றனர்.   இந்த பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காண மாவட்ட நிர்வாகம்  முன்வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: