காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்க கோரி திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

திசையன்விளை, நவ.19: காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க கோரி திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   திசையன்விளை செல்வ மருதூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மூன்றரை வயது மகள் மோனிஷா. கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து காய்ச்சல் குணமாகாததால் சிகிச்சைக்காக திசையன்விளை மேம்படுத்த அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷா பரிதாபமாக இறந்தார்.  மேலும் அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் ஜெர்சன்ராஜ்(6), விஜயகுமார் மகன் வன்னிராஜா(8 மாதம்) ஆகியோரும் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ்(6),சந்தோஷ்(4), இளங்கோ(3), இளமாறன்(5) உட்பட சிலரும் திசையன்விளையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertising
Advertising

 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க கோரி நேற்று மாலை செல்வமருதூர் பகுதியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன் தலைமையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் கடை வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ், சுபா பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: