×

விலகி போங்கப்பா.... சாலைகளில் கால்நடைகள் ‘ஜாலி ரவுண்ட்ஸ்’

சிவகாசி, நவ. 19: சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவைகளை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகாசியில் திருத்தங்கல் சாலை, திருவில்லிபுத்தூர் சாலை, வெம்பக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் படுத்து உறங்குகின்றன. தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். சில சமயங்களில் பலத்த காயமடைந்து உயிரிழக்கும் சம்பவமும் நடக்கின்றது.

சாலையோரம் உள்ள புற்களை மேய்வதற்காக ஆடு, மாடுகள் சாலையில் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக திரிவது வழக்கம். மாடுகள் வளர்ப்போர், அவைகளுக்கு தீவனத்தை வாங்கி போடாமல் மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், மாடுகள் சாலைகள் மட்டுமின்றி, தெருக்களிலும் திரிகின்றன. குறிப்பாக சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் ரிசர்வ்லைன், சாட்சியாபுரம், ஹவுசிங் போர்டு சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. டூவீலரில் செல்பவர்கள் மீது மாடுகள் மோதி விபத்து நிகழ்கின்றன. இதனால் பலர் கை,கால் உடைந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : roads ,
× RELATED கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது