×

இந்த நாள் வீடு கட்ட ஆணை வழங்க வேண்டும்

விருதுநகர், நவ. 19: வீடு கட்டுவதற்கு ஆணை வழங்க வேண்டும் என சலவைத் தொழிலாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். சலவைத் தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், திருச்சுழி பகுதி சலவைத்தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சுழியில் 37 சலவைத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைக்கு சில ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனை பெற்ற சலவைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மத்திய, மாநில அரசுகளில் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு உரிய அனுமதி பெற்றுத்தர வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளனர். அருந்ததியர் குடியிருப்பில் தனிநபர் ஆக்கிரமிப்பு திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி அருந்ததிய சமூக மக்கள் ஊர்நாட்டமை பெருமாள் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாச்சியார்பட்டி அயன்நாச்சியார்கோவில் காளியம்மன் கோவில் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில் வழங்கப்பட்ட 60 இலவச வீட்டுமனை பட்டாக்களில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பட்டாவுக்கான நடைபாதையாக 6 அடி நிலத்தை அரசு வழங்கியது. இந்த நடைபாதையை 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நடைபாதை இடத்தை முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டுள்ளார். அது தனது இடம் என மிரட்டுகிறார். இது குறித்து திருவில்லிபுத்தூர் தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  கலெக்டர் தலையிட்டு நடைபாதையை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி கடந்த நவ.4ல் மனு அளித்தோம். இதுவரை ஆக்கிரமித்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அருந்ததிய குடியிருப்பு பகுதியில் நிலவும் கழிப்பறை, தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதியின்றி அவதி

விருதுநகர் கலெக்டர் அலுவலத்தில் கன்னார்பட்டி அருந்ததிய மக்கள் பொன்னுச்சாமி என்பவரது தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் அருந்திய மக்கள் வசிக்கும் பகுதியில் தெருவிளக்கு, வாறுகால் வசதி, குளியல் தொட்டி, மயான எரிமேடை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட பழைய வீடுகளில் ஒரே வீட்டில் நான்கு குடும்பத்தினர் வரை வசித்து வருகின்றனர்.
பட்டாசு, துப்புரவு, விவசாயம் என கூலி குறைவாக கிடைக்கும் வேலைகளை செய்து வருகின்றோம். எங்களது குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதற்கான படிவங்களில் அதிகாரிகள் கையெழுத்து போட மறுக்கின்றனர். ஊராட்சி செயலர், தனி அலுவலர், கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...