×

முதுகுளத்தூர் கண்மாய்களில் டிராக்டர்களில் தண்ணீர் திருட்டு தடுத்து நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி, நவ.19:  முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் நிரம்பிய தண்ணீரை டிராக்டர்களில் அள்ளிச் சென்று விற்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் தற்போது பெய்த மழைக்கு பெரியகண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இக்கண்மாய் தண்ணீரை முதுகுளத்தூர், வடக்கூர், செல்வநாயகபுரம், எம்.தூரி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி விவசாய பாசனத்திற்காக பயன்படுத்துவர். இக்கண்மாய் பாசனம் மூலமாக சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இப்பகுதியில் நெல் விதை விதைக்கப்பட்டது. தொடர் மழையால் பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர்விடும் நிலையில் உள்ளது. இனி மழை பொய்த்து போனால், கண்மாயில் கிடக்கும் தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சி பயிர்களை காப்பாற்றும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இந்நிலையில் கண்மாயில் கிடக்கும் தண்ணீரை டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு, தண்ணீரை வியாபார நோக்கத்தில் கட்டிடங்கள், கரிமூட்டம் போன்ற பயன்பாட்டிற்காக சிலர் எடுத்து வருகின்றனர். இதனால் நாளுக்கு, நாள் கண்மாயில் தண்ணீரின் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கண்மாயில் வியாபார நோக்கில் விற்பனைக்காக தண்ணீர் எடுக்கும் டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுனர் மீது பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : water theft ,tractors ,Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...