தனி தாலுகாவாக அறிவிக்க கோரி கொட்டாம்பட்டியில் கடையடைப்பு, மறியல்

மேலூர், நவ. 19: தனி தாலுகாவாக அறிவிக்க கோரி கொட்டாம்பட்டியில் பொதுமக்கள், வியாபாரிகள் சாலைமறியல், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் எம்எல்ஏ பெரியபுள்ளான் மேலூர் தாலுகாவை 2 ஆக பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அன்று முதல் கொட்டாம்பட்டியை தலைமையாக கொண்டு தனித்தாலுகா அமைய வேண்டும் என அப்பகுதி மக்களும், கருங்காலக்குடியை தலைமையாக கொண்டு தனித்தாலுகா அமைய வேண்டும் என அப்பகுதி மக்களும் போராட முடிவு செய்தனர். இதில் கொட்டாம்பட்டி பகுதி பொதுமக்கள், வர்த்தகர் சங்கம், கார் உரிமையாளர்கள்- ஓட்டுனர்கள் சங்கம், அரசியல் கட்சியினர் இணைந்து நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி காவல் நிலையம் சென்று மனு ஒன்றை அளித்தனர். அதில், கொட்டாம்பட்டியை தலைமையாக கொண்ட புதிய தாலுகா அமைக்க கோரி நவ.18 (நேற்று) கடையடைப்பு- உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து நேற்று கொட்டாம்பட்டி பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. பின்னர் பொதுமக்கள், பஸ்ஸ்டாண்ட் அருகில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி சுபாஷ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு  மறியலை கைவிட்ட பொதுமக்கள்  காவல்நிலையம் முன்பு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் தாசில்தார் சிவகாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘மேலூரை 2 ஆக பிரிப்பதற்கு எந்த அரசு ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளதை மட்டும் நம்பி நீங்கள் போராட கூடாது. ஆயிரம் பேர் கோரிக்கை வைக்கலாம். தனித் தாலுகாவாக பிரிப்பதற்கு போதுமான மக்கள் தொகை இங்கு இல்லை. தற்போதைய சூழ்நிலையே தொடரும். உங்கள் போராட்டம் வீண்’ என்றார்.

இதை சிலர் ஏற்று கொண்டனர். ஆனால் பலர் ஏற்காமல் கொட்டாம்பட்டியை தனித்தாலுகாவாக மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்து சென்றனர். சுமார் 1 மணிநேரம் நீடித்த இந்த மறியலால் கொட்டாம்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலை வழியாகவே திருப்பி விடப்பட்டது. போகிற போக்கில் எம்எல்ஏ ஒரு கோரிக்கையை அமைச்சரிடம் கொளுத்தி போட்டு விட்டு போக, அது தீயாய் பற்றி எரிவதாகவும், இதனால் பக்கத்து பக்கத்து ஊராட்சியை சேர்ந்தவர்களுக்குள் மோதல் மனப்பான்மை ஏற்பட்டு விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Related Stories: