பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதல் திருமணம் செய்த பெண் கலெக்டரிடம் புகார்

திண்டுக்கல், நவ.19: காதல்  திருமணம் செய்ததால் ஜாதி வேறுபாடு காட்டி தன்னையும், தன் கணவரையும் கொலை  செய்ய முயற்சிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். கரூர்  மாவட்டம், வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். தொழிலதிபரான இவரது மகள்  சுருதி என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காந்தி நகரைச்  சேர்ந்த சோலைமலை என்பவரின் மகன் விஜயன் என்பவரும் பொறியியல் கல்லூரியில்  படிக்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு 20.7.2018  அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு  சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுருதியின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24.7.2018 அன்று குஜிலியம்பாறையிலுள்ள  விஜயன் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததோடு, சுருதியை கரூருக்கு அழைத்துச்  சென்றுவிட்டனர். கடந்த ஒரு வருடமாக கரூரில் சுருதியை அவரது பெற்றோர்   தங்களது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 8 நாட்களுக்கு முன்பு கரூரிலிருந்து சுருதி தப்பி  குஜிலியம்பாறை  வந்து தனது காதல் கணவருடன் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் சுருதி நேற்று 18.11.19 தனது காதல் கணவர் விஜயனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு வந்து   தன்னை தனது காதல் கணவருடன் வாழவிடாமல் தனது  பெற்றோர் மற்றும் உறவினர்களும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.  எனவே தனது பெற்றோர்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில்  தெரிவித்துள்ளார்.

Related Stories: