கொடைக்கானல் ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா

கொடைக்கானல், நவ. 19: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சாலையோரத்தில் கடைகளை அமைக்கக்கோரி  வியாபாரிகள் ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் உள்ளது வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சாலையோரத்தில் கடைகள் அமைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இந்நிலையில்  அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். இதையடுத்து  நெடுஞ்சாலைத் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்றனர். இதற்கு இந்த பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கொடைக்கானல் தாசில்தார் வில்சன், காவல்துறை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர். பின்னர் தாங்களாகவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதையடுத்து கடந்த வாரம் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தங்களுக்கு கடைகள் அமைத்து தர வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் சிறு வியாபாரிகள் மனு கொடுத்தனர். மனுவை விசாரித்த கலெக்டர் கொடைக்கானல் நகராட்சி கமிஷனரை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறையினர் இந்தப் பகுதிகளில் கடைகள் அமைக்க கூடாது என்று திட்டவட்டமாக கூறியதை அடுத்து நேற்று கொடைக்கானல் ஆர்டிஓ வை சந்திப்பதற்கு சிறு வியாபாரிகள் சென்றனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்றும், தங்களது கடைகளை அகற்றக் கூடாது என்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் கடைகள் அமைத்து தரக்கோரி சிறு வியாபாரிகள் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறு வியாபாரிகளை சந்தித்த கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன் வரும் வாரத்திற்கு கடைகளை அமைக்க வேண்டாம் என்றும், அதன் பின்னர் குழு அமைத்து முடிவெடுத்து கடைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சுமார் 3 மணி நேரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: