×

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய கோரி மனு

திருப்பூர், நவ.19:திருப்பூர்,  மாவட்டத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி  நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர்  சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து  மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் அவிநாசி,  திருப்பூர் கோட்டங்களில் மற்றும் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில்  பல்லடம், கோட்டடத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களில் ஏறக்குறைய 90 சதவீதம்  அளவு உதவியாளர்களுக்கான பணியிடங்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக  இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிதாக  ஒதுக்கீடு செய்யப்பட்ட மஸ்தூர் மற்றும் ஐடிஐ பயின்ற கள உதவியாளர்கள்  அனைவரும் வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஓராண்டு பணி முடிந்ததும் சொந்த  மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்கள்.

திருப்பூர்  மாவட்டத்தைச் சார்ந்த ஐடிஐ பயின்ற பணியாளர்கள் மின்வாரிய பணிக்கு  வருவதில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 6 லட்சம் மின்  இணைப்புகளை பராமரிக்கும் பணிகளை சொற்ப அளவில் வயதான வாரிய பணியாட்களால் மேற்கொள்ள முடியாது என வாரியத்துக்கு தெரிந்தாலும் வாரியம்  ஒப்பந்த தொழிலாளர்களை ஒருபோதும் கணக்கில் காட்டுவதில்லை.  கடந்த ஐந்து வருடங்களில்  மட்டுமே விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களில் 13  பேர் உயிரிழந்துள்ளார்கள். மற்றவர்கள் படுகாயமடைந்த உறுப்புகள் இழந்தும்  உள்ளார்கள். அவர்களது, குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. போனஸ்  வழங்க கோரி மாவட்ட கலெக்டர் வழியாக திருப்பூர் மின் பகிர்மான வட்ட  மேற்பார்வை பொறியாளர் அளிக்கப்பட்ட விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் நீண்ட காலமாக  திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில்  நடைபெற்று வரும் வழக்கில் திட்டமிட்டு ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து  விரைவில் தீர்வு காண திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்  உத்தரவிட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

Tags : Tamil Nadu ,contract workers ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...