×

வெள்ளை ஈ தாக்குதல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை

கோவை, நவ. 19: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய  வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி  அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கோவை மாவட்டத்தில் வெள்ளை ஈ  தாக்குதல் மூலம் தென்னை, வாழை, கத்திரி, எலுமிச்சை, தக்காளி போன்ற  விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்கள் கடுமையான முறையில்  பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் வங்கி கடன்  மூலம் இந்த விவசாயித்தை செய்து வருகின்றனர். வெள்ளை ஈ தாக்குதல் தொடர்பாக  அவர்களால் வங்கி கடன் செலுத்த முடியாது. எனவே விவசாயிகள் கடனை தள்ளுபடி  செய்யவேண்டும். அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வனவிலங்குகளால்  விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனவிலங்குகள் தொல்லை செய்வதை  தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில்  கூறப்பட்டுள்ளது.

மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரி மாதம்பட்டி இளைஞர்கள் குழு சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:  கோவை மாவட்டம் பேரூர் தாலுகா தொண்டாமுத்தூர் ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சியில் சிறுவாணி செல்லும் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் அரசு நிர்ணயித்த நேரத்தை விட கூடுதல் நேரம் மதுவிற்பனை செய்யப்படுகிறது. மதுவும் அதிக விலையில் விற்கப்படுகிறது. மதுக்கடைக்கு பின்புறம் தான் தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. மது குடித்துவிட்டு வருபவர்கள் இந்த வங்கி வழியாக வந்து வங்கிக்கு வரும் மக்களிடையே தொல்லை செய்கிறார்கள். குடித்துவிட்டு அங்கயே படுத்துக்கொள்கிறார்கள். எனவே  மதுக்கடை இடமாற்றம் செய்யவேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் 4 பேர் குடித்துவிட்டு தண்டவாளத்தில் அமர்ந்திருக்கும் போது ரயில் மோதி பலியானார்கள். இது போன்ற சம்பவங்களை தடுக்க உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி ஆசிரமம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புதியதாக மதுக்கடை திறக்க கட்டிடம் கட்டுப்பட்டு வருகிறது. இதனை தடுத்து இப்பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கக்கூடாது. பள்ளிகள், கோவில்கள், ஆதிதிரவிட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த கடையை திறக்க என்றுமே அனுமதி வழங்கக்கூடாது. செங்கல் சூளைகளை மூடி, அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :கோவை மாவட்டம் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், தடாகம், வீரபாண்டி புதூர், சோமயம்பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் செங்கல் சூளைகளுக்காக மணல் கொள்ளை நடந்துள்ளது. இந்த மணல் கொள்ளை பல வருடங்களாக நடக்கிறது. சட்ட விரோத செங்கல் சூளைகள் மண் கொள்ளை அடிப்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியும். மேலும் செங்கல் சூளைகள் முந்திரி தோலை எரிபொருளாக கொண்டு பயன்படுத்தி வந்ததால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. உடனடியாக செங்கல் சூளைகளை மூடி விசாரனை ஆணையம் அமைத்து சட்டவிரோத இயங்கிய செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பீளமேடு பகுதிகளில் குப்பைகள் முழுமையாக அல்லப்படுவதில்லை என மதிமுக பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : பீளமேடு பகுதியில் வி.கே.ரோடு, எல்லை தோட்ட ரோடு, வி.ஓ.சி காலனி, ஆர்.கே.எம்.சி காலனி, முருகன் நகர், கருப்பண்ண கவுண்டர் லே அவுட் மற்றும் ஹட்கோ காலனி, முருகன் நகர் ஆகிய பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் முழுவதும் அல்லப்படுவதில்லை. மாநகராட்சி லாரிகள் வருகிறது. அதில் பக்கவாட்டில் உள்ள குப்பைகளை எடுக்கிறார்கள், தொட்டிக்குள் இருக்கும் குப்பைகளை எடுப்பதில்லை. இப்படியாக தொடர்ந்து முழுவதும் குப்பைகள் அகற்றப்படாத சூழ்நிலையே நிலவுகிறது. அதிகாரிகள் இடத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து முழுவதும் குப்பைகளை தினமும் எடுக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அதனை ஆய்வு வேண்டும்.  அதே போல் சாக்கடைகள் மாதக்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிகமாகி மேலே கண்ட நோய்கள் பரவி வருகிறது.
அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது.

விநாசி சாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி என்பவர் பணிக்கு சென்று கொண்டிருந்தபொழுது அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்ததால் அவர் விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தற்போது இடது கால் எடுக்கப்பட்டுள்ளது எதிர்பாராத விபத்தில் சிக்கிய அவரது மருத்துவச் செலவுக்கும் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அவரது குடும்ப சூழலை கணக்கில் கொண்டும் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். விபத்து நடக்க காரணமாகவும் கவனக்குறைவாக கொடிக் கம்பங்களை அங்கு அமைத்த அப்பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு  அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

Tags : attack ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...