சம்பா பருவ நெல் பயிர் காப்பீடுக்கு 192 கிராமங்களுக்கு அனுமதி

ஈரோடு, நவ. 19:  மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாரத  பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு  மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை,  மேட்டூர் வலது கரை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர்  திறக்கப்பட்டு சுமார் 63 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. இதற்காக 192 வருவாய் கிராமங்களில் சம்பா நெல் பயிரை  காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு தொடர்பான  தகவல்களை பெற ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களை  விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

Advertising
Advertising

ஈரோடு மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய  ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கை  செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றிக்கு ரூ.478.50  பிரிமீயம் செலுத்தி ரூ.31 ஆயிரத்து 800 வரை காப்பீடு பெறலாம். பயிர்  காப்பீடு செய்ய இறுதி நாள் வருகின்ற 30ம் தேதி ஆகும். எனவே மாவட்டத்தில்  உள்ள அனைத்து விவசாயிகளும், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை  மையத்தில் ஆதார் நகல், வங்கி கணக்கு, புத்தக நகல், சிட்டா, அடங்கல் ஆகிய  ஆவணங்களுடன் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: