×

சொட்டு நீர் பாசன மானியத்தில் கரும்புக்கு மட்டும் முக்கியத்துவம்

ஈரோடு, நவ. 19:   சொட்டு நீர் பாசன மானியத்தில் கரும்புக்கு மட்டும் மானியம் அதிகரித்துள்ள நிலையில் வாழை, தென்னை ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் கரும்பு, வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களுக்கு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் சொட்டு நீர் பாசன வசதி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மானியத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. எனவே தற்போது நடைமுறையில் உள்ள சூழலுக்கு ஏற்ப மானியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். தற்போது நடைமுறையில் அனைத்து பயிர்களுக்கும் எக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலைவாசி உயர்வு காரணமாக ஒரு எக்டர் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கூடுதல் செலவு ஏற்படுவதால் அரசு மானியத்தொகையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசு கரும்புக்கு மட்டும் மானியம் உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால் அதே வேளையில் வாழை, தென்னை, மரவள்ளி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான மானியத்தொகையை உயர்த்தாமல் விட்டு விட்டதால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது பற்றி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: சொட்டு நீர் மானியம் என்பது 10 ஆண்டுக்கு முன்பு அன்றைய விலைவாசி உயர்வை கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இன்று குழாய்கள், வால்வுகள் உள்ளிட்டவைகளின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. அரசு வழங்கும் மானியத்தை விட எக்டர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கூடுதல் செலவு ஆகிறது. எனவே தான் மானிய தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். ஆனால் தமிழக அரசு கரும்புக்கான மானியத்தை மட்டும் உயர்த்தி உள்ளது. மற்ற பயிர்களுக்கான மானியத்தொகையை உயர்த்தவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை வாழை, குச்சிக்கிழங்கு, தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே அனைத்து பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசன மானியத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...