சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர் வரும் 2ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

வேலூர், நவ.19:சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் 2ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம்தேதி சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் முருகன் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு செல்போனை கைப்பற்றினர். இதுதொடர்பாக பாகாயம் போலீசில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான வழக்கு நேற்று வேலூர் ஜேஎம்-1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார், சிறையில் இருந்த முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த ஜேஎம்-1 நீதிபதி (பொறுப்பு) நிஷா, வழக்கை டிசம்பர் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் முருகனை மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: