போலீசாரின் உடல், மன வலிமை ஊக்குவிக்கப்படும் ரவுடிகள், மணல் கடத்தல் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்பி எச்சரிக்கை

வேலூர், நவ.19:ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கடத்தல், ரவுடிசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்பியாக விஜயகுமார் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக மயில்வாகனன் நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் பூங்கொடுத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து எஸ்பி மயில்வாகனன் நிருபர்களிடம் கூறியதாவது:புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்கள். என்னை எஸ்பியாக நியமித்த முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறை அடிப்படை கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். எஸ்பி அலுவலகம், ஆயுதப்படை. சிறப்பு பிரிவுகள் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காவல் நிலையங்களில் போதிய இடவசதி உள்ளதா, காவல்துறைக்கு குடியிருப்பு உள்ளதா என ஆலோசனை மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் காவலர் பயிற்சி பள்ளி தேவைப்பட்டால் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படும்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடல் வலிமை மற்றும் மனலிமையுடன் செயல்பட்டால் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அவர்களின் உடல், மன வலிமையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஒழுக்கம், கண்ணியம், கடமை முக்கியமானது. புதிய மாவட்டத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. காவல் நிலையங்களில் பீட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என டிஜிபி தெரிவித்துள்ளார்.அதனால் சிறிய சிறிய குற்றங்கள் நடப்பது தடுக்கப்படும். காவல் நிலையங்களில் பயமின்றி பொதுமக்கள் வந்து மனு அளிக்கும் வகையில் செம்மைப்படுத்தப்படும். மனுக்கள் மீதான விசாரணை நடத்த காலதாமதம் ஆவதால் சிறிய பிரச்னை கூட பெரிய பிரச்னையாக ஆகிவிடுகிறது. எனவே பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். உடனுக்குடன் நடவடிக்ைக மேற்கொள்ளப்படும்.மக்களுடன் காவல்துறை இணைந்து பணியாற்ற விரும்புகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளதால் மாணவர்கள், தொழிலாளர்களை கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மணல் கடத்தல், ரவுடிகள் மற்றும் குற்றச்சம்பங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருந்தி வாழும் குற்றவாளிக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். புதிய மாவட்டம் என்பதால் தற்ேபாது தெரிவித்துள்ள அனைத்தும் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: