வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் 953 பேர் பங்கேற்பு ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆய்வு

வேலூர், நவ.19:வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2ம் நிலை காலவர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 953 பேர் பங்கேற்றனர். இதனை ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, எஸ்பி விஜயகுமார்(பொறுப்பு) ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 46 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி பெற்றனர். வேலூர் மாவட்டத்தில் 3,688 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,334 பேர் என மொத்தம் 5,022 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அயோத்தி தீர்ப்பு வெளியானதால் காவலர் உடற்தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டு 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், காவலர் தேர்வு ஆணையம் அறிவித்தபடி, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. முதற்கட்டமாக கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடந்தது.

அதில், தேர்வானவர்கள் தனித்தனியே 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு 1500 மீட்டர் ஓட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடற்தகுதி தேர்வுகளை ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, வேலூர் எஸ்பி விஜயகுமார் (பொறுப்பு) ஆகியோர் காவலர் தேர்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். காவலர் தேர்வுப் பணியில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 953 பேர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், எடை, மார்பளவு ஆகியவை சரிபார்க்கப்பட்டு 1500 மீட்டர் ஓட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.இதில் தேர்வு செய்யப்படுவோர் கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர், 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்பார்கள். 2ம் நிலை பெண் காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நாளை (இன்று) நடக்கிறது’ என்றனர்.

Related Stories: