×

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, நவ.19: விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும், பவர்கிரிட் நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புதிய மின் வழித்தடங்களை அமைக்கிறது. இத்திட்டத்துக்காக அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.விவசாயிகளின் அனுமதியும், ஒப்புதலும் பெறாமல் ‘அவசரகால அத்தியாவசிய திட்டம்’ எனும் பொது அறிவிப்பின் மூலம் அத்துமீறி அமைக்கப்படும் ராட்சத உயர்மின் கோபுரங்களால், விவசாய விளை நிலங்கள் பறிபோகிறது. எனவே, இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும், நிலத்தடியில் கேபிள் மூலம் மின் வழித்தடம் அமைக்க வேண்டும், என வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட மறுத்துவிட்டது.

இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகேயுள்ள அறிவொளி பூங்கா அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாநில குழு உறுப்பினர் வீரபத்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். அதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது, விவசாய நிலங்களை அழிக்காமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும், மின் கோபுரம் அமைப்பதால் நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. எனவே, சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், தனியார் நிலங்களில் அமைத்த செல்போன் டவர்களுக்கு மாத வடகை வழங்குவதை போல, உயர்மின் கோபுரங்களுக்கும் மாதாந்திர வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.க்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த மறியலால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதித்தது. எனவே, மறியல் போராட்டத்தில் ஈடுட்ட 38 பெண்கள் உள்பட மொத்தம் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் விவாசய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். வட்டத்தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், வட்ட தலைவர் ரவி, வட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர். வட்ட பொருளாளர் ராமசாமி வரவேற்றார்.அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏடிஎஸ்பி ஞானசேகரன் தலைமையில் டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர்கள் வினாயகமூர்த்தி, ரேகாமதி மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 விவசாயிகளை கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போளூர் தாசில்தார் ஜெயவேலூ தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்துறையினர் முகாமிட்டு கண்காணித்தனர்.

Tags : raids ,Thiruvannamalai ,
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு