×

அரசு திட்டங்களில் வீடு பெறுவதற்காக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நூற்றுக்கணக்கானோர் மனு குறை தீர்வு கூட்டத்தில் அலைமோதிய மக்கள்

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மனு அளிக்க நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்ட உதவிகள், சுய தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 735 பேர் மனு அளித்தனர். வழக்கத்தைவிட நேற்று மனு அளிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பகுதியில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் மனு அளித்தனர். கூட்டம் அதிகரித்ததால், காலை 10.30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணி வரை அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.மேலும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கேட்கும் மனுக்களை பெறுவதற்கு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டராம்பட்டு தாலுகா, தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்.

மேலும், தங்களுடைய பெயரில் வீட்டுமனை இல்லாத காரணத்தால், பசுமை வீடு, பிரதமரின் வீடு வழங்கும் திட்டங்களில் அரசு வழங்கும் இலவச வீடுகளை பெற முடியாமல் தவிப்பதாக தெரிவித்தனர். மேலும், இலவச வீட்டுமனை கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வீட்டுமனை வழங்க பணம் கேட்கின்றனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வீட்டுமனை கேட்டு மனு அளித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 380 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் குவிந்ததால், அலுவலகத்துக்கு வெளியே கூட்டம் அலைமோதியது. எனவே, அங்கிருந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

Tags : Hundreds ,
× RELATED ஜெர்மனியில் கொரோனா...