×

ஆதி திராவிடர் விடுதிகளில் உள்ள மாணவ, மாணவியர் விபரம் இல்லை நலத்துறை அலுவலகம் கைவிரிப்பு

நாகர்கோவில், நவ.19:  குமரி மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் விடுதிகளில் தங்கி பயிலுகின்ற மாணவ மாணவியர் விபரங்கள் தங்களிடம் இல்லை என்று மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக அதிகாரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், ‘குமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் ஒரு மாணவனுக்கு உணவு கட்டணமாக அரசால் எவ்வளவு வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளில் மாணவர்கள் எத்தனை பேர், மாணவியர் எத்தனை பேர் என்ற விபரங்களை விடுதி வாரியாக பட்டியலிட வேண்டும். உணவு வழங்க மாவட்டத்திற்கு மொத்த அரசு நிதி எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக அதிகாரிகளிடம் கோரியிருந்தோம், ஆனால் மனுதாரர் கோரும் தகவல்கள் இந்த அலுவலகத்தில் ஆவணமாக்கப்படவில்லை, மாவட்டத்தில் 2 ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் அலுவலக பொது தகவல் அலுவலர்களுக்கு தனித்தனியே விண்ணப்பித்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விபரங்கள் இல்லை என்று அதிகாரிகள் மெத்தனமாக கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags : Student ,Adi Dravidar Hostel ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...