வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு யூரியா தராமல் ஆளுங்கட்சியினருக்கு வழங்கல்

புதுக்கோட்டை, நவ. 19: வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்காமல் ஆளுங்கட்சியினருக்கு வழங்குவதாக திமுக விவசாய அணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஆஸ்கார், கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பிசான சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைப்பதில்லை. இதுகுறித்து கடந்த அக்டோபரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட போது ஒரு வாரத்தில் தட்டுப்பாடின்றி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் இதுவரை விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை. வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உரம் வழங்காமல் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே உரம் வழங்கப்படுகிறது. தனியார் உரக்கடைகளில் யூரியா வாங்க வேண்டும் என்றால் உபயோகமற்ற விற்காத உரங்களையும் சேர்த்து வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, கூட்டாம்புளி, சேர்வைகாரன் மடம், சிவத்தையாபுரம், ஏரல், ஆத்தூர், கருங்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட அனைத்து விவசாய ஊர்களிலும் யூரியா உரம் இல்லை. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: