அத்திமரப்பட்டியில் சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்

ஸ்பிக்நகர், நவ.19: தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு செல்லும் சாலை முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் இருந்து அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசல் வழியாக சாயர்புரத்திற்கு 52எம் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. போதுமான பராமரிப்பு பணிகள் இல்லாததால் கருவேல மரங்கள் சாைலயை ஆக்கிரமித்திருந்ததாலும் சாலைகள் சேதமடைந்திருப்பதாலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இவ்வழியாக இயக்கப்பட்ட பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.தற்போது இந்த வழித்தடத்தில் இருச்சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்வோரை பதம்பார்க்கிறது. இதுகுறித்து அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் அழகுராஜா ஜெபராஜா கூறுகையில் அத்திமரப்பட்டியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய பொருட்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு இல்லாததால் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 10 வருடங்களாக சாலைகள் பழுதடைந்து கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும் என்றார்.

Related Stories: