×

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளை பராமரிக்க குழந்தை நேய காவல் பிரிவு

திருவள்ளூர், நவ. 19: திருவள்ளுர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, குழந்தை நேய காவல் பிரிவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், போலீஸ் எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.தொடர்ந்து, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘’திருவள்ளுர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், குழந்தைகளுடன் வரும் பெண்கள், தங்கள் குழந்தைகளை பராமரிக்க குழந்தை நேய காவல் நிலையம் என தனி பிரிவு அமைத்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களான திருவள்ளுர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் 3 நிலையங்களில் குழந்தை நேய காவல் நிலையம் முன்னோட்டமாக திறக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களும் விரைவில் மாற்றப்படும். ஜனவரி முதல் இன்று வரை 1,269 பெண்கள் காவல் நிலையங்களை அணுகியுள்ளனர். அவர்களில் 640 நபர்கள் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர்.

அவ்வாறு வரும் குழந்தைகள் எவ்வித சிரமமின்றி தங்கள் நேரத்தினை செலவழிக்கும் விதமாக இந்த அறை பயன்படும். திருவள்ளுர் மாவட்டத்தை குழந்தைகள் நேய மாவட்டமாக மாற்றுவதற்காக நீதி துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல் துறை மூலமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்கள் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, பெண்கள் வள மையத்தில் தகவல் தெரிவித்து உரிய தீர்வு காணலாம். இம்மையத்தில் குழந்தை திருமணம், வன்கொடுமை போன்ற புகார்கள் வரப்பெற்று நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘’1098’’ சேவை வாயிலாக குழந்தை திருமணங்கள் கடந்த ஆண்டு 60 திருமணங்களும், இந்த ஆண்டு 48 திருமணங்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, கல்வி பயிலவும் அரசு இல்லங்களில் தங்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயனடைய வேண்டும்’’ என்றார். இதில், காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Child Protection Division ,children ,women ,Tiruvallur ,police station ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...