முரசொலி மாறன் மேம்பாலம் அருகே புதர்மண்டிய மாநகராட்சி பூங்கா: சமூக விரோதிகள் கூடாரமானது

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 71வது வார்டில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே, கடந்த 2011ம் ஆண்டு, 93 லட்சம் செலவில், பெரம்பூர் நெடுஞ்சாலை வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதி ஜமாலியா செல்லும்  வழியில் பிரமாண்ட பூங்கா, திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. வடக்கு பகுதியில் உள்ள பூங்காவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தெற்கு பகுதியில் ஜமாலியா  செல்லும் வழியில் உள்ள பூங்காவை   ஆரம்பம் முதலே அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை.  இதனால் பொலிவிழந்து, மக்கள் வரத்து குறைந்தது. இதை பயன்படுத்தி காதல் ஜோடிகள் அட்டகாசம் அதிகரித்தது. தற்போது இந்த பூங்கா முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, குடிமகன்கள்  திறந்தவெளி பாராக இதை பயன்படுத்தி வருகின்றனர்.

பூங்காவில் மதில் சுவர் உயரம் குறைவாக உள்ளதால், இரவு நேரங்களில் பலர் உள்ளே குதித்து கஞ்சா அடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு  கொண்டு வர வேண்டும், என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, பூங்கா சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளதால், அருகில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அதிகாரிகள், இந்த பூங்காவை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி  உள்ளனர்.

Related Stories: