வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாக இருந்தவர் ஜெகமோகன் மீனா. இவர் கடந்த 1.11.07 முதல் 24.11.09 வரை பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.89 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பணியில் இருந்த காலத்தில் ஜெகமோகன் மீனா, அவர் பெயரிலும், அவரது குடும்பத்தினர் தார்மி மீனா, நிரஞ்சன் குமார் மீனா ஆகியோர் பெயரிலும் சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது. பின்னர், இதனை உறுதி செய்த சிபிஐ அதிகாரிகள், இந்திய தண்டனை சட்டம் 467, 468, 471 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை 14வது சிபிஐ நீதிமன்ற நீதிபதி வசந்தி முன்பு நடந்து வந்தது. கடந்த 2010ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் 3 பேரும் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், அரசு சாட்சி விசாரணைகள், குறுக்கு விசாரணை, இருதரப்பு வாதங்கள் என அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் சொத்து சேர்த்தது உறுதியாகியுள்ளது. எனவே ஜெகமோகன் மீனாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினர் தார்மி மீனா, நிரஞ்சன் குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories:

>