மின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

பேராவூரணி, நவ. 14: தமிழக மின்வாரியம் மின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டடுமென நுகர்வோர் குழு வலியுறுத்தியது. மின்துறை அமைச்சருக்கு பேராவூரணி அடுத்த புனல்வாசல் நுகர்வோர் குழுத்தலைவர் சவரிமுத்து கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தமிழக மின்வாரியத்தில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதை ஈடு செய்ய மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் செலுத்தும் கட்டணம், மானியம் போன்றவற்றின் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் ஆண்டுதோறும் மின்வாரியத்துக்கு வருவாய் கிடைக்கிறது. இதிலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம், தளவாட செலவுகள் உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில் 2014-15ம் ஆண்டில் வாரியத்துக்கு ரூ.12 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக தொழிற்சங்கங்கள் வாயிலாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மின்கட்டணம் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பயனீட்டாளர்களிடம் மின்வாரியம் பெற்றுள்ள வைப்பு நிதிக்கு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வட்டி வழங்கப்படாமல் பயனீட்டாளர்களின் வைப்பு நிதியிலேயே சேர்க்கப்பட்டு வருகிறது. இதுதவிர மின் கட்டணங்களை உயர்த்தாமல் மின்வாரியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளையும், ஊழல்களையும் சரி செய்தாலே லாபத்தில் இயங்க வைக்க முடியும். மின்வாரியம் இதை கவனத்தில் கொள்ளாமல் மின் கட்டணம் உயர்த்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: