மானியத்தில் வேளாண் இயந்திரம் வாடகை மையங்கள் அமைக்கலாம்

தஞ்சை, நவ. 14: தஞ்சை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் 7 வேளாண் இயந்திரங்கள் வாடகை திட்ட மையம் அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு கிடைப்பதால் விவசாய பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு நல்ல மகசூல் பெற முடியும்.

மையம் அமைக்கப்பட்டவுடன் ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.10 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதில் ரூ.5 லட்சம் உடனடியாகவும், மீதமுள்ள ரூ.5 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாக இருந்து வந்தது. தற்போது விவசாயிகள் விரைவில் பயன்பெற வேண்டி நிரந்தர வைப்பு நிதி ரூ.5 லட்சம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தஞ்சை கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தஞ்சை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் குமணன் (பொ) 9443489403 என்ற கைபேசி எண்ணிலும், கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் 6383830644 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் எழிலன் 9443678621 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு செயற்பொறியாளர் கான் 9443398633 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: