அம்மாப்பேட்டை தனியார் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

பாபநாசம், நவ. 14: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 50, 000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அவை வளர்ச்சி பருவத்தில் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் மேலுரம் இடும் தருணத்தில் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் உள்ள முக்கிய வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இப்கோ, இந்தியன் பொட்டாஷ் போன்ற நிறுவனங்களின் வேம்பு கலந்த யூரியா, பொட்டாஷ், டிஏபி ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யூரியாவின் விற்பனை விலை மற்றும் இருப்பு விபரங்களை சரிபார்க்க கடந்த 2 நாட்களாக வேளாண்துறையின் அனைத்து அலுவலர்களும் கள ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

கோவிலூர், சாலியமங்கலம், திருக்கருக்காவூர், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, வேளாண் அலுவலர் ராஜதுரை, வேளாண் அலுவலர் ஷாகிரா ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உரங்களின் கையிருப்பு, பட்டியலிட பட்ட விபரம், பாயிண்ட் ஆப் சேல் மெஷினில் உள்ள இருப்பு விபரம் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. மேலும் உர உரிமம், மொத்த விற்பனையாளரின் ஓ படிவம், எடை மெஷின் சான்றிதழ் ஆகியவையும் சரி பார்க்கப்பட்டன. அப்போது பாயிண்ட் ஆப் சேல் மெஷின் பழுதடைந்துள்ளதாக சில விற்பனை நிலையங்களில் தெரிவிக்கப்பட்டது. அவற்றுக்கு ஒருவார காலம் விற்பனை தடை விதிக்கப்பட்டு இந்த காலக்கெடுவுக்குள் மெஷினை சீர் செய்து காண்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: