அதிகாரிகளின் நடவடிக்கையால் செழித்து வளரும் மரக்கன்றுகள்

பேராவூரணி, நவ. 14: பேராவூரணி பகுதியில் தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் நட்டு வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் செழித்து வளர்ந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கொரட்டூர் அருகில் உள்ள பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் செம்மரம், ஆப்பிரிக்கன் தேக்கு, வேம்பு, கோங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. அவற்றுக்கு கூண்டு, வேலி அமைத்து தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மரக்கன்றுகள் செழித்து வளர்ந்த 6 மாதங்களை கடந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் மரக்கன்றுகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் முழுவதும் சேதமடைந்த மரக்கன்றுகளை மீண்டும் நட்டு கவாத்து செய்து பராமரிப்பு செய்தனர். ஓராண்டு கழிந்த நிலையில் தற்போது மரக்கன்றுகள் செழித்து வளர்ந்துள்ளது.

இதேபோல் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் தனியார் பங்களிப்புடன் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், தலைமை எழுத்தர் சிவலிங்கம் மேற்பார்வையில் பள்ளிகள், சாலையோரங்கள், பொது இடங்கள், கடைவீதி, தனியார் வீடுகள் ஆகியவற்றில் தனியார் பங்களிப்புடன் நடப்பட்டது.

தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக மரக்கன்றுகள் நன்றாக துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. பேரூராட்சியின் மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தை தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு பாராட்டி சென்றுள்ளார்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் தெரிவித்ததாவது: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டியும், நீர் மேலாண்மை திட்டத்தின்கீழும் நடப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளில் ஏறத்தாழ 70 சதவீதம் செழித்து வளர்ந்துள்ளது. கால்நடைகள் கடித்து வீணாகியது, பட்டு போனது போன்றவை தவிர்த்து பெரும்பாலும் நன்றாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் நகரே சோலைவனமாக மாறும் நிலை உள்ளது.

எதிர்காலத்தில் மழைவளம் சிறக்கவும், தூய்மையான காற்று கிடைக்கவும் மரம் வளர்ப்பு உதவியாக இருக்கும். பொது இடங்களில் உள்ள செடிகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் அக்கறை காட்ட வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை தங்கள் வீடுகள், வணிக வளாகங்களில் ஏற்படுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரை நாம் விட்டு செல்ல வேண்டும் என்றனர். பேரூராட்சி நிர்வாகத்தின் மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>