×

தொற்றா நோய்கள் கண்டுபிடிக்கும் பிரிவினை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

க.பரமத்தி, நவ.14: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாநோய்கள் கண்டுபிடிக்கும் பிரிவினை மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு இதனை உயிரூட்ட தேவையான நடவடிக்கையை எடுக்க முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் கீழ் 22 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாறிவரும் உலகில் இன்று 30 வயதினை கடந்து விட்டாலே சர்வ சாதாரணமாக ரத்த அழுத்தம்(பிரசர்), சர்க்கரை நோய்கள் வந்துவிடுகின்றன. ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மெடிக்கல் செக்அப் செய்த பின்பே பாதிப்பு உள்ளதாக தெரியவருகிறது. இதற்காகவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றாநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தினமும் சிகிச்சைக்கு வருபவர்களின் எடை, பிரசர் அளவு, சரிபார்க்க்கப்படுவதுடன், ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு சர்க்கரை உள்ளதா என்பதையும், பிரசர் பாதிப்பு உள்ளவர்களுக்கு இ.சி.ஜி. எடுக்கப்படுகிறது.

மாவட்ட அளவில் சராசரியாக சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால் கிராம புறங்களை பொறுத்தவரை இதன் பாதிப்புகள் இருந்தாலும் அவை உடனடியாக வெளியே தெரியாத நிலை உள்ளது. காரணம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களை பொறுத்தவரை அனைவருக்கும் செக்கப் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டாலும் தொற்றா நோய்கள் பற்றிய பரிசோதனையோ செய்யப்படுவதில்லை. அதிலும் ரத்தம், சிறுநீர் எடுத்து பரிசோதனை செய்யக்கூடிய லேப்டெக்னிசியன்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளதால் இதில் பெயரளவில் மட்டுமே ஈடுபடுகின்றனர். இதனால் கிராமப்புற மக்கள் தொற்றாநோய் பாதிப்பிற்கு உள்ளாகி அதன் பாதிப்பு அதிகமான பின்பே சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை நோயிலா மாவட்ட உலகம் படைக்கவும், பரவிவரும் நோய்களை கட்டுப்படுத்திடவும் எவ்வளவோ கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கீடு செய்கிறது.

ஆனால் அவை முழுமையான அளவில் பயன்படுத்தப்படாத காரணத்தினால் தொற்றா நோய்களின் பாதிப்புகளால் இளம் வயதிலேயே உயிரிழப்பை சந்திப்பவர்கள் மிக அதிகமாக உள்ளனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் கிராமங்களை நோக்கி சிறப்பு மருத்துவ முகாம்கள் என்ற பெயரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தலைமை மருத்துவமனையில் உள்ள அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் கிராமங்களில் முகாமிட்டு கிராம மக்களை பரிசோதனை செய்து உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரை செய்வார்கள்.இதனால் நோய்களின் தாக்கமும் சிறிது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் காலமாற்றத்தின் காரணமாக இன்றோ அவை எந்த கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் தொற்றா நோய்களின் பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய் கண்டுபிடிப்பு பிரிவுகளில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து உயர்சிகிச்சைக்கு பரிந்துரைப்பது அதிகமாக நடக்கிறது.கிராமங்களில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களை பொறுத்தவரை இவை செயல்பட்டாலும் தனியாக ரிஸ்க் எடுத்து பார்ப்பதில்லை. இதனால் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்திட அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் தனியாக ஒரு டீமை நியமித்து அனைவருக்கும் செக்கப் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களிடத்திலே இருந்தாலும் இதற்கு உயிரூட்ட தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் பார்வையிட முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பொன்னமராவதியில் இருந்து இரவு 10...