×

வெவ்வேறு இடங்களில் திருட்டு 3 பேர் கைது: 23 பவுன் நகைகள் மீட்பு


க.பரமத்தி, நவ.14: தென்னிலை அருகே வெவ்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வழக்கில்3 பேரை தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து 23பவுன் நகைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை காவல் நிலைய சரகத்தில் தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, மொஞ்சனூர், துக்காச்சி, அஞ்சூர், கார்வழி, கோடந்தூர் ஆகிய குக்கிராமங்களில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்தநிலையில் கடந்த ஒருமாத காலமாக தென்னிலை காவல் நிலைய சரகத்தில் வெவ்வேறு இடங்களில் தனியே வரும் பெண்ணிடம் நகை பறிப்பு வீடுகளில் பணம், நகை திருட்டுக்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து பொருட்களை இழந்த பலரும் போலீசில் புகார் தெரிவித்து வந்த நிலையில் திருடர்களை பிடிக்க எஸ்பி பாண்டியராஜன் ஆலோசனையின் படி தென்னிலை இன்ஸ்பெக்டர் ரமாதேவி தீவிர முயற்சி எடுத்து வந்தார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஒன்றியம் முழுவதும் வாகனங்கள் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து தொப்பம்பட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்துள்ளனர். மேலும் போலீசாரை கண்டவுடன் பைக்கில் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றுள்ளனர். பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து 3 பேரிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். விசாரணையில்சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோம்பை வேலம்மாவலசு குணசேகரன் மகன் தங்கராசு(25), சங்ககிரி அருகே மோடிகாடு பகுதியில் ராஜ் மகன் பிரகாஷ்(19), வேலம்மாவலசுதச்சம்பாறை பகுதி கந்தசாமி மகன் சதீஸ்குமார்(34) ஆகியோர் என்பது தெரியவந்தது. 3 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் தாலி கொடி மற்றும் தங்க சங்கிலி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கடந்த 3ம்தேதி கோடந்தூரில் மளிகை கடையில் மகேஸ்வரிடம் 7 பவுன் தங்க சங்கிலியும், கடந்த மார்ச் மாதம் கொடுமுடி பகுதி மகேஷ்வரி என்ற ஆசிரியையிடம் 11 பவுனில் தங்க சங்கிலியையும், கடந்த ஏப்ரல் மாதம் க.பரமத்தி அருகே காஞ்சினாப்பட்டியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் சுமதி என்பவரிடம் 6 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளதை 3பேரும் ஒப்புகொண்டனர்.

பிறகு தங்கராஜ், பிரகாஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேர் மீது தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 23பவுன் நகைகளையும், திருடுவதற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : theft ,
× RELATED மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது