×

டாஸ்மாக் கடையை மூடக்கோரி 18ம் தேதி சாலைமறியல்

சீர்காழி, நவ.14: சீர்காழி அருகே திருவெண்காட்டில் இருந்து நெய்தவாசல் செல்லும் சாலையில் நடவு வயல்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி வருகிற 18ம்தேதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் இருந்து நெய்தவாசல் செல்லும் சாலையில் நடவு செய்து வரும் வயல்களுக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த கடையை இங்கு அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடை திறக்கும் போதே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தற்போது வரை டாஸ்மாக் கடை அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் அதிகளவில் குடித்துவிட்டு போதை ஏறியதும் அரை குறை ஆடைகளுடன் நடுரோட்டில் விழுந்து கிடப்பது அப்பகுதி மக்களை முகம் சுளிக்க செய்கிறது.

மேலும் மதுபான பாட்டில்களை விளைநிலங்களில் குடிமகன்கள் உடைத்து வீசி செல்வதால் வயல்களில் பாட்டில்கள் உடைந்து கிடப்பதால் விவசாய பணிகளுக்கு வருபவர்கள் காலில் குத்தி ரத்தகாயமடைகின்றனர். இதனாலேயே சிலர் விவசாய பணிகளுக்கு வர மறுக்கின்றனர். டாஸ்மாக் கடையால் நெய்த வாசல் சாலையில் விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குடிமகன்கள் போதை ஏறிய பிறகு அந்த பகுதியில் உள்ள வயல்களிலும், வாய்க்கால்களிலும் விழுந்து கிடக்கும் சம்பவம் தினந்தோறும் நடந்து வருகிறது. பொதுமக்கள் விவசாயிகள் நலன்கருதி நெய்தவாசல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி வருகிற 18ம் தேதி (திங்கள்) காலை 10 மணி அளவில் திருவெண்காடு தேரடி வீதியில் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்