×

ரேஷன் பணியாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

நாகை, நவ.14: 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகையில் 3வது நாளாக ரேஷன்கடைகளை மூடி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறைப்படுத்தவேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை ஏற்படுத்த வேண்டும். சரியான எடையில் உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 11ம்தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைகடை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து 2வது நாளாக (12ம் தேதி) ரேஷன் கடைகளை மூடிவிட்டு நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3வது நாளாக நேற்று (13ம் தேதி) நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், ஆடியபாதம், மோகன்தாஸ், தங்கராஜு, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டார். வட்ட கிளை செயலாளர் ரமணராவ் நன்றி கூறினார். ரேஷன்கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் குடிமைப்பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Ration staff ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்