சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்

சீர்காழி, நவ.14: சீர்காழி அருகே திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே மழைநீர் வடியாமல் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனை எதிரே மழைநீர் நீருடன் கழிவுநீர் கலந்து பல நாட்களாக குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதனை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பேருந்துகள் வரும்போது மருத்துவமனைக்கு வருவோர் மீதும் சாலையில் நடந்து செல்வோர் மீதும் சேற்றுடன் கலந்து கண்ணீர் மேலே தெளித்து வருகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நோய்களை தீர்க்க மருத்துவமனைக்கு செல்லும் இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பது வருத்தம் அளிக்கும் செயல். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED கால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்