×

காய்ச்சல் பரவுவதை தடுக்க 60 பேர் குழு தீவிர பணி

சீர்காழி, நவ.14: நாகை மாவட்டத்தில் பல்வேறு காய்ச்சல் பரவுவதை தடுக்க 60 பேர் குழு நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருவதாக கலெக்டர் பிரவின் பி நாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் மக்கள்தொடர்மபு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரவீன் பி. நாயர் தலைமை வகித்தார். மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி, சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் மலர்விழி, வட்ட வழங்கல் துறை தனி தாசில்தார் இந்துமதி, நிலம் எடுப்பு தனி தாசில்தார் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெஜிராணி, கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் சாந்தி வரவேற்றார். நாகை கலெக்டர் பிரவீன் பி நாயர் 59 நபர்களுக்கு வீட்டுமனைபட்டா, 16 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டகலைத்துறை சார்பில் 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் என ரூ.7.5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், மாவட்ட அதிகாரிகள் உங்களை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நேரடியாக வந்து பயன்பெறவேண்டும். விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். நாங்கூர் பள்ளி சார்பில் வைத்துள்ள கண்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. இதனை அனைவரும் பார்வையிட்டு செல்லவேண்டும்.

நாகையில் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டம் போல் மயிலாடுதுறை கோட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும். விவசாயிகள் ஒன்றுகூடி குழு அமைத்து வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும். தற்போது பல்வேறு காரணங்களால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சலை தடுக்கும் வகையில் 60 பேர்குழு நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் மட்டுமே கொசுக்களை அழிக்க முடியாது. மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். நல்ல தண்ணீரில் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகி வருகிறது. இதனால் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். ஆகையால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு துணிப்பையை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இயற்கையை காக்க முடியும் என்றார்.
இதில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சூரியமூர்த்தி, சீர்காழி வேளாண்மை துணை இயக்குனர் சின்னண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தேவலதா, முன்னாள் ஊராட்சி தலைவர் இலங்கேஸ்வரன், ஒன்றிய பொறியாளர் முத்துகுமார், வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரி ராஜாமணிஅம்பேத் நன்றி கூறினார்.

Tags : group ,spread ,
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...