×

புதிய வேளாண் ஒப்பந்த சாகுபடி திட்டத்தால் சாதகம் எதுவும் இல்லை

மயிலாடுதுறை, நவ.14: மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் லாசர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர், நாகை மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உட்பட பலர் பேசினர். மாநில தலைவர் லாசர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறிவருகிறார். ஆனால் பல பொருளாதார வல்லூனர்கள் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது குறித்து தினந்தோறும் கூறி வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சியால் கிராமப்புற பொருளாதாரம், ஏழை எளிய மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது. கிராமப்புற தொழிலாளர்கள் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாய் கிடைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். நூறுநாள் வேலைதிட்டத்திற்கு 5 ஆயிரம்கோடி மத்திய அரசு நிதிஒதுக்கீடு செய்தால் அதில் 4 ஆயிரம் கோடியை கட்டுமான பணிகளுக்கு மாநில அரசு நிதிஒதுக்குகிறது. இதனால் வேலைவாய்பு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நூறுநாள் வேலைதிட்டத்தில் 20 முதல் 30 நாட்கள்தான் வேலை வழங்கப்படுகிறது.

அதற்கான உரிய ஊதியமும் வழங்கப்படவில்லை. கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மாறிமாறி ஆட்சிசெய்தாலும் தேர்தல் நேரத்தில்மட்டும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் தலைமுறை தலைமுறையாக ஒரு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க மறுக்கின்றனர். கோயில், அறக்கட்டளை, ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான சட்ட திட்டங்கள் இல்லை என்று கூறுகின்றனர். அதற்கான சட்டதிருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்து ஏழை மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். புதிய வேளாண் ஒப்பந்த சாகுபடி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியதாக அரசு அறிவிக்கிறது. அதில் உள்ள அம்சங்கள் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதமாக இருக்கிறது. அதனை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்றார்.

Tags :
× RELATED நாளை வரை பயிர் காப்பீடு...