×

செறுபனையூரில் டிராக்டர் மோதி சிறுமி பரிதாப பலி

முத்துப்பேட்டை, நவ.14: முத்துப்பேட்டை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி செறுபனையூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் - தமிழரசி தம்பதியின் மகள்கள் சக்திபிரியா(12), காவியா (10). இதில் மூத்த மகள் சக்திபிரியா உதயமார்த்தாண்டபுரம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி சக்திபிரியா உடைகளை மாற்றிவிட்டு கடைதெருவிற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பினார். அப்போது அப்பகுதியில் அதிவேகமாக சென்ற டிராக்டர் ஒன்று சிறுமி சக்திபிரியா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் தூக்கி வீசப்பட்ட சிறுமி சக்திபிரியா தலையில் பலத்த காயமடைந்து அவரது வீட்டின் வாசலிலேயே துடிதுடித்து இறந்தார். இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் பலியான சிறுமி சக்திபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து சிறுமியின் தாத்தா மணிமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் டிராக்டர் புத்தகரம் சத்தியநாராயணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதனை தேவதனம் பகுதியை சேர்ந்த பிச்சையப்பன் மகன் ஜான் ஓட்டி சென்றதும் தெரியவந்தது.இதனையடுத்து தலைமறைவாக இருந்த டிரைவர் ஜானை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED சாராய கும்பலை பிடிக்க 3வது நாளாக...