×

திருவாரூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி, நவ.14: திருவாரூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.திருவாரூர் மாவட்ட எஸ்பிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ரகுராமன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் காவலர்கள் வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக கடந்த மாதம் லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்ட நகைகள் குறித்த திருட்டு விவரங்கள் உடனே கண்டுபிடிக்கப்பட்டது, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு துரித நடவடிக்கைகள் ஆகியவை பாராட்டத்தக்கது. ஆனால் காவலர்கள் நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் பெருமளவில் தேக்கமடைந்து நிற்கிறது. கடந்த 2016ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஹலோ போலீஸ் என்கிற குற்றவியல் புகார்கள் குறித்த பொதுமக்களின் புகார்களுக்கு உடனே தீர்வு காணும் விதமாக புகார் அளிப்பதற்கு வசதியாக துவங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஹலோ போலீஸ் திட்டம் என்பது செயலிழந்து காணப்படுகிறது. ஹாலோ போலீஸ் என்னை தொடர்பு கொண்டால் அந்த எண் எடுக்கப்படுவதில்லை. பலமுறை முயற்சிக்கு பிறகே அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடிகிறது. அப்படி தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஆனால் கடந்த காலங்களில் அந்த ஹலோ போலீசிற்கு தகவல் தெரிந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் அளிக்கும் புகார்களை அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இரவு பகல் என எந்நேரமும் சந்தித்து விசாரித்தனர். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஹலோ போலீஸ் திட்டத்தை மீண்டும் சரிவர தொய்வில்லாமல் துவங்குவதற்கு மாவட்ட காவல் துறை சார்பில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட செய்தி ஊடகவியல் பிரிவு வாயிலாக இம்மாவட்டத்தின் காவல்துறை நடவடிக்கை குறித்தும் அவ்வப்போது குற்றசம்பவங்கள் மீது எடுத்த துரித பாராட்டத்தக்க நடவடிக்கைகள் குறித்தும் செய்திகள் வெளியிடப்படுகிறது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டநடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு வரும் அதேநேரத்தில் சாமானிய பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என எளிதாக குற்ற நிகழ்விடத்திலிருந்தே தங்களை பாதுகாத்துக் கொள்ள அளிக்கும் புகார்களை முறையாக கண்டறிந்து உனடியாக தீர்ப்பதற்கு ஏதுவாக ஹலோ போலீஸ் திட்டத்தை துரிதப்படுத்தி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Thiruvarur district ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் அரசின் அண்ணா...