×

நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூரு சிறையிலுள்ள முருகனை திருச்சி கொண்டு வருவதில் இழுபறி: இன்றாவது ஒப்படைக்கப்படுவாரா என போலீசார் காத்திருப்பு

திருச்சி, நவ.14: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் அக்டோபர் 2ம் தேதி சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளான கும்பல் தலைவன் முருகன், கனகவல்லியின் மகன் சுரேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வந்த நிலையில் அக்டோபர் 9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். முருகன் அக்டோபர் 11ம் தேதி பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா முன்னிலையில் சரணடைந்தார். பெங்களூருவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக 2014 அக்டோபர் 21ம் தேதி பானஸ்வாடி போலீசார் முருகனை கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வந்த முருகன் தலைமறைவானதால், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் தான் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் முருகனை கஸ்டடி எடுத்து விசாரிக்க பெங்களூரு போலீசார் அன்றைய தினமே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து 5 நாட்கள் கஸ்டடி பெற்றனர். அதன்பின்னர் தொடர்ச்சியாக முருகனை பெங்களூரு போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் கஸ்டடி முடிந்த நிலையில் பெங்களூரு போலீசார் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் முருகனை கஸ்டடி எடுக்கும் நோக்கில் கோட்டை இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் பி.டி (பிரிசினர் டிரான்ஸ்பர்) வாரண்ட் பெற்றுக்கொண்டு நேற்று முன்தினம் பெங்களூரு சென்று பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் வழங்கினார். அதை தொடர்ந்து வாரண்ட் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்கள் விசாரணை நடந்தது. தொடர்ந்து மாஜிஸ்திரேட் (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.
இதனால் தமிழக போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று முருகனை திருச்சி அழைத்து சென்றுவிடலாம் என்ற முடிவோடு திருச்சி போலீசார் பெங்களூருவில் காத்துக்கிடக்கின்றனர்.

Tags : Murugan ,jail ,Tirupati ,Bangalore ,jewelery robbery ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...