ஈவுத் தொகையை தராமல் இழுத்தடிப்பு ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தை டிஆர்இயூ முற்றுகை: போலீசார் தடுத்து நிறுத்தம்

திருச்சி, நவம்.14: ஈவுத்தொகையை தராமல் இழுத்தடிக்கும் திருச்சி ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தை டிஆர்இயூ தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ரயில்வே சொசைட்டியில் கடந்த நிதியாண்டு 2018-19, ரூ.68 கோடி நிகர லாபம். லாபத்தில் 14 சதவீதம் ஈவுத்தொகை சொசைட்டி உறுப்பினர்களுக்கு பங்காக பிரித்து தர வேண்டும். கடந்த நிதியாண்டு கணக்கில் ஈவுத்தொகையாக ரூ.9 கோடியே 52 லட்சம் உறுப்பினர்களுக்கு தர வேண்டும். திருச்சி ரயில்வே சொசைட்டியில் தமிழக கேரள பகுதிகளில் ரயில்வேயில் பணியாற்றும் 28,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த ஈவுத்தொகை தொகை உறுப்பினர்களுக்கு சராசரியாக ரூ.3,400 வரை கிடைக்கும். கடந்த ஆண்டு வரை தீபாவளிக்கு முன்னதாக இந்த ஈவுத்தொகை உறுப்பினர்களுக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ரயில்வே சொசைட்டி இந்த தொகையை தராமல் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடித்தது.

இந்த தொகை வழங்காமல் முறைகேடுகள் செய்ய சொசைட்டி நிர்வாகம் முயல்வதாக கருதி உடனடியாக ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க வலியுறுத்தி திருச்சி சொசைட்டி முன்பாக முற்றுகை போராட்டம் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் நடத்தியது. அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கோட்டச் செயலாளர் கண்ணன், துணைப் பொதுச் செயலாளர் மனோகரன், செயல் தலைவர் ஜானகிராமன், சிஐடியூ திருச்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் உள்பட பலர் கலந்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.

Related Stories: