×

சுடுகாடு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் மனு

விருத்தாசலம், நவ. 14:  விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள கோ. ஆதனூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழந்த பொதுமக்களின் உடலை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மணிமுக்தாற்றின் கரையில் சுமார் 40 சென்ட் பரப்பளவுள்ள சுடுகாடு அமைந்துள்ளது. இந்நிலையில் சுடுகாட்டின் அருகே தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் சுடுகாட்டில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதனையும் ஏர் உழுது, புதைக்கப்பட்டிருந்த உடல்களை எல்லாம் தோண்டி வெளியே எடுத்து போட்டுவிட்டு, விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள், விருத்தாசலம் தாசில்தார் கவியரசு மற்றும் வருவாய் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் சுடுகாட்டை அளவீடு செய்வதற்காக நேற்று விருத்தாசலம் வருவாய்த்துறையினர் சென்றபோது, ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர் அவர்களிடம் தகராறு செய்து அளவீடு செய்வதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று விருத்தாசலம் தாசில்தார் கவியரசுவை சந்தித்து மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அதில், நூற்றாண்டுகளுக்கும் மேலாக சுடுகாட்டை பயன்படுத்தி வந்தோம். சுடுகாட்டில் போதிய இடம் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் அருகிலுள்ள மணிமுக்தாற்றில் பிணத்தை புதைத்து வந்தோம். மணிமுக்தாற்றில் வெள்ளம் வரும் நேரத்தில் இந்த சுடுகாட்டை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் தற்போது அந்த சுடுகாட்டு இடத்தை மேலும் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனால் தற்போது சுடுகாடு முழுவதும் காணாமல் போகும் நிலை உள்ளது. எனவே, தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், மணிமுக்தாற்றில் நீர்ப் பிடிப்பு வந்தால் வேறு வழியின்றி சுடுகாட்டை தான் 100 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.

அதனால் தற்போது சுடுகாட்டை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் கவியரசு, சம்பந்தப்பட்ட துறையின் மேல் அதிகாரிகளிடம் கூறி விசாரணை மேற்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டு சென்றனர்.

Tags : Sudukadu ,
× RELATED வடசேரியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு