×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

நெய்வேலி, நவ. 14:   நெய்வேலி அடுத்து இருப்பு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பு கிராமத்தில் செயல்பட்டு வருகின்றது. இம் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இம்மருத்துவமனையை சுற்றி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் இரு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். காலை பத்து மணியிலிருந்து மதியம் வரை மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அமருவதற்கு இடம் இல்லாமல் தரையில் அமரும் நிலை உள்ளது. மேலும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கழிப்பிடம் இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் போதிய டாக்டர்கள் இல்லாமல் இம்மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். விடுமுறை நாட்களில் டாக்டர்கள் வருவதில்லை என கூறப்படுகிறது.

அந்நேரத்தில் பிரசவம் பார்ப்பதற்கு டாக்டர் இல்லாமல் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் இருப்பு சாலையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றது. இங்கு விபத்தில் சிக்குபவர்கள் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த மருத்துவமனையை சுற்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசர காலங்களில் நாய்கடி, விஷக்கடிக்கு மருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவமனையை தரம் உயர்த்தவும், போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்
பகுதி மக்கள்கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : doctors ,health center ,
× RELATED வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு...