×

வெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா

சின்னசேலம், நவ. 14: விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக  பிரிந்துள்ளது. அதற்கான இடம் ஆய்வுப்பணி, எல்லை வரையறை பணிகளை கவனிக்க தனி  அலுவலர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சின்னசேலம்  தாலுகாவை பொறுத்தவரை சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி மற்றும்  கல்வராயன்மலைப்பகுதியை உள்ளடக்கி உள்ளது. கல்வராயன்மலையில்  மக்கள் தொகை குறைவாக இருந்தபோதிலும் நிலபரப்பளவில் மிகப்பெரியது ஆகும்.  கல்வராயன்மலையில் கரியாலூர், வெள்ளிமலை, மணியார்பாளையம், சோரப்பட்டு  உள்ளிட்ட 172 சிறிய, பெரிய கிராமங்கள் உள்ளன. வெள்ளிமலை, இந்நாடு,  பொட்டியம் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் உள்ளது. கல்வராயன்மலையில் உள்ள மக்கள் சாதி சான்று, ஆதார் திருத்தம், இதர சான்றுகள்  உள்ளிட்ட எந்த வேலையாக இருந்தாலும் மலையில் இருந்து 60கிலோமீட்டர் பயணம்  செய்து கச்சிராயபாளையம் வந்து பின் அங்கிருந்து சின்னசேலம் தாலுகா அலுவலகம்  வரவேண்டும். இதனால் மலைவாழ் மக்களின் காலநேரம் விரயமாவதுடன், பொருளாதார  அளவில் இழப்பும் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதைப்போல வீடு  மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா, நில அளவை போன்ற பணிகளுக்கும் சின்னசேலம்  வரவேண்டிய நிலை இருந்து வந்தது.

கல்வராயன்மலையில் தற்போதே  ஒரு தனிதாசில்தார், பிடிஓ அலுவலகம் உள்ளது. தனி ஊராட்சி ஒன்றியமாக  செயல்படுகிறது. கல்வராயன்மலையை தனி தாலுகாவாக அறிவித்தால் மலைமக்களுக்கு  சாதி, வருமானம் உள்ளிட்ட இதர சான்றுகள் வாங்குவதற்கும், நலத்திட்ட உதவிகள்  பெறுவதற்கும், வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா பெறுவதற்கும் வசதியாக  இருக்கும். ஆகையால் கல்வராயன்மலையில் உள்ள  வெள்ளிமலையை தலைமையிடமாகக்  கொண்டு  புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று மலைமக்கள் ஆவலுடன்  எதிர்பார்த்திருந்தனர்.இதுகுறித்து தினகரன் நாளிதழிலும் கடந்த  மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து வெள்ளிமலையை  தலைமையிடமாகக் கொண்டு கல்வராயன்மலை தாலுகாவாக அரசு அறிவித்துள்ளது. மேலும்  கல்வராயன்மலை தாலுகாவில் வெள்ளிமலை, சேராப்பட்டு ஆகிய இரு குறுவட்டங்கள்  உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மலைமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி,  சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5  தாலுகாவுடன் கல்வராயன்மலை தாலுகாவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : taluka ,headquarters ,Silver Hill ,
× RELATED தண்ணீர் தேடி வந்து சேற்றில் சிக்கிய யானை