கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித்தரம் பாதிப்பு

கள்ளக்குறிச்சி, நவ. 14: கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள்  பற்றாக்குறையால் மாணவிகளின் கல்வித்தரம் குறையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   இதுசம்பந்தமாக கள்ளக்குறிச்சி  மாவட்ட மக்கள் நலச் சங்கத் தலைவர் ஹாரூன்ரஷீத் என்பவர் சென்னை பள்ளி  கல்வித்துறை இயக்குநர் மற்றும் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கள்ளக்குறிச்சி அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 11 மற்றும் 12 ம் வகுப்புகளில்  தமிழ் வழியில் 881 மாணவிகளும், ஆங்கில வழியில் 235 மாணவிகள் என மொத்தம்  1116 பேர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில  வழிக்கல்விக்கென தனி ஆசிரியர்கள் இல்லாததால் தமிழ்வழி கல்வியில் பாடம் நடத்தும்  ஆசிரியர்களே ஆங்கில வழிக்கல்வி பாடத்தையும் நடத்தி வருகின்றனர்.    

அத்துடன்  பாட வாரியாக உயிரியல், தமிழ், கணிதம், வரலாறு, விலங்கியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியரும், ஆங்கிலம்-2, இயற்பியல்-3, வேதியியல்-2, வணிகவியல்-2, என மொத்தம் 15 ஆசிரியர்கள் மட்டுமே  பணியில் உள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்திற்கென தனியாக பெற்றோர் ஆசிரியர்  கழகத்தின் மூலமாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் 1100க்கும்  மேற்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை கொண்ட இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள்  இல்லாததால் மொழிப்பாடம் நடத்தும் வகுப்பறையில் ஒரே நேரத்தில் 200க்கும்  மேற்பட்டவர்களை அமர வைத்து பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது.  மற்ற பாடங்களுக்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே  வகுப்பறையில் வைத்து பாடம் நடத்தப்படுகிறது. இதனால் மாணவிகள் இடநெருக்கடியால், பாடத்தை சரியாக கவனிக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆசிரியர் பற்றாக்குறையால்தான் இந்த அரசு பள்ளியில்  படிக்கும் மாணவிகளின் கல்வித்தரம் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் பின்தங்கி வருகிறது.

எனவே கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவிகளின் கல்விதரத்தை உயர்த்தும் விதமாக மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய  ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: