தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி, நவ. 14: கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் 8 ம்தேதி  தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து  மாவட்ட தனி அலுவலராக கிராண்குராலா நியமிக்கப்பட்டார். தற்காலிக மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் செயல்படுவதற்காக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட  வளாகத்தை தேர்வு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட இடம் தேர்வு  செய்யும் பணியிலும் மாவட்ட தனி அலுவலர் கிராண்குராலா தீவிரமாக செயல்பட்டு  வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்குவதற்கான அரசாணை நேற்று வெளியானது.அதில்,  கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு உட்பட்ட 2 வருவாய் கோட்டங்கள் அதாவது  கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகியவை உள்ளடங்கியது.

மேலும் 6 வட்டங்கள்  அதாவது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர்,  உளுந்தூர்பேட்டை ஆகியவையும், புதிய தாலுகாவாக கல்வராயன்மலையும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் 6 தாலுகாக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  உள்ளடங்கியது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட தனி அலுவலர்  பயன்பாட்டிற்கான புதிய வாகனம் மற்றும் விஐபி வாகனம் என மொத்தம் 2 வாகனம்  வாங்குவதற்காக ரூ.32.30 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  தொடங்குவதற்காக ரூ.64 லட்சத்து 200 நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: