தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்

விழுப்புரம், நவ. 14: செல்போன் டவர்

அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. விழுப்புரம்  மகாராஜபுரம் மகாதேவன் நகர் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதிகளில் தனியார்  செல்போன் நிறுவனம் சார்பில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் செல்போன்  கோபுரம் அமைக்க முயற்சி செய்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்போன்  கோபுரம் அமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக விழுப்புரம்  தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் கணேஷ் தலைமை  தாங்கினார். நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், தாலுகா போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய்  ஆய்வாளர் சாதிக், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ்  ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.
Advertising
Advertising

இதில் தனியார் செல்போன் நிறுவனத்தினர் மற்றும்  மகாதேவன் நகர்,  கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மேற்கண்ட 2 இடங்களிலும் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செல்போன்  கோபுரம் அமைப்பது தொடர்பாக முடிவு செய்ய இருதரப்பினருக்கும் 15 நாட்கள் கால  அவகாசம் அளிக்கப்பட்டது. இதேபோன்று மகாராஜபுரம் மகாதேவன் நகரில் மாற்று  இடம் தேர்வு செய்யும்படி செல்போன் நிறுவனத்தினருக்கு தாசில்தார் கணேஷ்  அறிவுறுத்தினார்.

Related Stories: