நியாயவிலைக்கடை ஊழியர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம்

விழுப்புரம்,  நவ. 14:  விழுப்புரம் மாவட்டத்தில் 3வது நாளாக நியாயவிலைக்கடை ஊழியர்கள்  ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். டிஎன்சிஎஸ்சி  ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தனித்துறையை  ஏற்படுத்தவேண்டும். நியாயவிலைக்கடைகளில் பொட்டலமுறை அமல்படுத்தவேண்டும்.  ஓய்வூதியம் வழங்கிடவும், பணிவரன்முறை செய்து மருத்துவப்படி ரூ.300 வழங்க  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி முதல் மாநிலம்  தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தை பொறுத்தவரை 2,020 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும்  தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 1,500 பேர்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நியாய விலைக்கடைகளில் அரிசி,  சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யும்பணி  பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம்  ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர்  சம்பத் தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பெருமாள் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் கோபிநாத் வரவேற்றார். தமிழ்நாடு  அரசுப்பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க  மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான ஊழியர்கள்  கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>