அரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை

புதுச்சேரி, நவ. 14: மருந்து கொள்முதலுக்கு அரசு போதிய நிதியை ஒதுக்காததால், புதுவை மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஏழை நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்காக புதுவை அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி வந்தது. சிறிய மாநிலமான புதுவையில் 8 பெரிய மருத்துவமனைகள், 4 சமுதாய நலவழி மையங்கள், 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சுகாதாரத்துறையானது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவமனைகள் மற்றும் சமுதாய நலவழி மையங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கி கொடுத்தது. அந்த நிதியை கொண்டு தேவையான மருந்துகளை மருத்துவமனை நிர்வாகங்களே வாங்கி, நோயாளிகளுக்கு வழங்கி வந்தன. ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மட்டும் கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகம் மூலம் மருந்துகள் வாங்கி சப்ளை செய்யப்பட்டு வந்தது.

  கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில், அனைத்து துறைகளும் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்குமாறு நிதித்துறை உத்தரவிட்டது. இதன் காரணமாக, சுகாதாரத்துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகள், சமுதாய நலவழி மையங்கள் நேடியாக மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு, தேவையான மருந்துகள் அரசு மருந்தகத்திலிருந்து நேரடியாக சப்ளை செய்யப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறையானது மருந்து கொள்முதல் செய்த பல நிறுவனங்களுக்கு காலக்கெடுவுக்குள் பணத்தை வழங்கவில்லை. இதனால் பாக்கி தொகை ரூ.10 கோடியை கடந்துவிட்டது. இதற்கு மேல் கடனுக்கு மருந்து சப்ளை செய்யும் சக்தியில்லை என்ற அந்த நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. இதையடுத்து, சுகாதாரத்துறை அத்தியாவசிய மருந்துகளை மட்டும் வேறு நிறுவனங்களிலிருந்து குறைவாக வாங்கி மருத்துவமனைக்கு சப்ளை செய்து வந்தது. நிகழாண்டு மருந்து கொள்முதலுக்கு அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது, அந்த நிதி தீர்ந்துவிட்டால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

 குறிப்பாக, நீரிழிவு நோய் மாத்திரை (Metformin), உயர் ரத்த அழுத்த நோய் மாத்திரைகள் (Envas, Amilodepine, Atenolol) ஒரு மாதத்திற்கு மேலாக கையிருப்பு இல்லை. இதில் `என்வாஸ்’ என்ற மாத்திரை மட்டும் 7 மாதங்களாக கையிருப்பில்லை. மேலும், நோய் தடுப்பு மாத்திரை பிரிவில் அமாக்சிலின் தவிர்த்து, வேறு எந்த தடுப்பு மாத்திரைகளும் இல்லை. தற்போது டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகின்றன. ஆனால், மருத்துவமனைகளில் அனைத்து வகையான காய்ச்சலுக்கு அமாக்சிலின் மாத்திரையை மட்டும் நோயாளிகளுக்கும் வழங்கும் அவலநிலை உள்ளது. இதுதவிர, வயிற்றுக்கு போக்கு தடுப்பு மாத்திரையான `ப்ளாகில்’ (Flagyl) தீர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இதனால் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனையையும், தனியார் மருந்தகங்களையும் நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நிலவி வரும் மருந்து பற்றாக்குறை பிரச்னையால், உயிரை காக்க வேண்டிய மருத்துவத்துறை மக்களுக்கு எமனாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, புதுவை அரசு இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

`நோய்க்கு தகுந்த மாத்திரையை

மருத்துவர்கள் வழங்குவதில்லை’

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய்க்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் வழங்கப்படவில்லை. நோய் குணமானால் போதும் என்ற நிலையில், இருக்கின்ற மாத்திரையை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். இதனால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. ஒரு மாதத்திற்கு மேலாக உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லாததால், கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்தில்லை என கூறி நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பல ஏழை நோயாளிகள் மருந்து வாங்க முடியாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். பிறகு நோயின் தாக்கம் அதிகரித்து நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. எனவே, புதுவை அரசு சிக்கன நடவடிக்கையை காரணம் காட்டாமல் மருந்து கொள்முதலுக்கு தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும்’ என்றனர்.

`அரசு ஒதுக்கும் நிதி போதவில்லை’

இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மருந்து கொள்முதல் செய்ய ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ரூ.6 கோடிதான் ஒதுக்கினார்கள். அது போதுமானதாக இல்லை. இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், வயிற்று போக்கு, நோய் தடுப்பு உள்ளிட்ட மருந்துகள் கையிருப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் துறைரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த திருத்த மதிப்பீடு செய்யப்படும். அப்போது, வேறு துறையில் செலவு செய்யப்படாத நிதி மருந்து கொள்முதலுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டும். அதன் பிறகே மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் ஜனவரி வரை காத்திருக்க முடியாது. அதற்கு மருந்து தட்டுப்பாடு பிரச்னையை போக்க வேண்டும். எனவே, புதுவை அரசுதான் உடனே நிதி ஒதுக்கி தந்தால் மருந்து தட்டுப்பாடு பிரச்னையை போக்கிவிடலாம்’ என்றனர்.

Related Stories: